Tuesday, 19 March 2013

கார்ல் சாகன் கட்டுரைகள்

அபத்தம் அறியும் நுண்கலை - 1

கார்ல் சாகன்


       
    எனது பெற்றோர்கள் மறைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நான் அவர்களிடம் மிகவும் பாசமாக நெருக்கமாக இருந்தேன். இன்னமும் கூட அவர்களது பிரிவு என்னை வாட்டுகிறது. எப்போதுமே அது வாட்டிக் கொண்டுதான் இருக்கும். நான் அவர்களிடம் கண்டதும் நேசித்ததுமான ஆளுமையும் சாரமும் உண்மையிலேயே இன்னும் கூட எங்கோ உலவுவதாக நம்புகிறேன்.

        அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டுமானால் அதிகமாக ஒன்றும் கேட்டுவிட மாட்டேன். வருடத்தில் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் மட்டுமாவது அவர்களது பேரக்குழந்தைகள் பற்றி ப் பேசவும், நான் இன்னும் அவர்களை நேசிக்கிறேன் என்பதை நினைவு படுத்தவும், சமீபத்திய சம்பவங்கள் பற்றி உரையாடவும், அவகாசம் கிடைத்தால் போதும். எவ்வளவுதான் குழந்தைத்
தனமாகத் தோன்றிய போதிலும் எனக்குள் ஒரு பகுதி இருக்கிறது, அது அவர்கள் இப்போது எப்படி இருப்பார்கள் என்ற வியப்பில் ஆழ்ந்து இருக்கிறது. "எல்லாமும் சரியாக இருக்கிறதா?" என அவர்களைக் கேட்க விரும்புகிறது. சாகும் தருவாயில்
என்னுடைய தந்தையார் இருக்கும் போது அவரிடம் கடைசியாக நான் சொன்ன வார்த்தை:" பத்திரமாக இருங்கள்!" என்பதாக நினனைவுக்கு வருகிறது.

சில சமயங்களில் எனது பெற்றோர்களுடன் பேசுவது போல கனவு காண்கிறேன். கனவுலகில் ஆழ்ந்திருக்கும் போதே திடீரென்று "அவர்கள் உண்மையில் சாகவில்லை. இதுவெல்லாம் தவறு" என்ற உணர்வு என்னை ஆட்டிப்படைக்கிறது. ஏன்? அவர்கள் இங்கே தான் உயிரோடும் நலமாகவும் இருக்கிறார்கள் - அப்பா வேடிக்கையான விடுகதைகள் போடுகிறார். "மப்ளர் கட்டிக்கொள் குளிராக இருக்கிறது பார்" என்று மிகவும் கரிசனத்தோடு அம்மா சொல்கிறார். நான் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் போது இந்தத் துயரக்கதையின் சுருக்கம் நிழலாடுகிறது. வெளிப்படையாகச்சொன்னால் சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை
தொடருவதாக நம்பும் ஏதோ ஒன்று எனக்குள் இருக்கிறது. இதற்குத் தேவையான சாட்சிகள் ஏதாவது இருக்கிறதா என்பது பற்றி நான் பொருட்படுத்துவதில்லை.
     
எனவே,அவ்வப்போதோ அல்லது மறைந்த தனது கணவரின் ஆண்டு நிறைவு நாளன்றோ அன்னாரது கல்லரைக்குச் சென்று மானசீகமாக உரையாடும் பெண்களைப் பார்த்து நான் வாய்விட்டு சிரிப்பதில்லை.அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதன்
மெய்ப்பொருள் குறித்து எனக்கு அய்யப்பாடு இருந்தால் பரவாயில்லை.நான் சொல்வது அது பற்றியது அல்ல.ஆனால் மனிதனாக இருப்பதைப் பற்றியது.

அமெரிக்காவில் இருக்கும் வயது வந்தவர்களிடையே மூன்றில் ஒரு பங்கினர் ஏதோ ஒரு வகையில் இறந்தவர்களோடு தொடர்பு ஏற்படுவதாக நம்புகின்றனர்.1988- தொடங்கி இந்த எண்ணிக்கை 15 விழுக்காடு அதிகரித்து விட்டதாகத் தெரியவருகிறது.அவர்களில்
நான்கில் ஒரு பகுதியினர் ஆன்மா வேறொரு உடலில் புகுவதாக நம்புகின்றனர்.

அதனால்,இறந்தவர்களின் ஆவியோடு பேசும் ஊடகமாக செயல்படும் பம்மாத்தை நான் எற்றுக்கொள்வதாகப் பொருள்படாது.அந்த நடைமுறை ஊழல் மலிந்தது என்பது எனக்குத் தெரியும்.பூச்சிகளும் பாம்புகளும் தங்கள் மேல் தோலை உறித்து விட்டு
நழுவுவதைப் போல எனது பெற்றோர்களும் தமது உடலின் வெளித்தோலை மட்டும் விட்டுப் பிரிந்து எங்கோ சென்றுள்ளனர் என்பது எனக்குத் தெரியும்.இத்தகைய உணர்வே என்னை, அறிவற்ற மந்திரம் செபிப்பவர்கள்,அல்லது தங்களது நினைவிலி மனம் பற்றிய
உணர்வு இல்லாதவர்கள் ஆயினும் இயல்பானவர்கள்,அல்லது யாருடனும் சேராமல் தனிமை தேடும் மனநோயாளிகள் ஆகியோருக்கு , இறையாக்கி விடும் என்பது எனக்குப் புரிகிறது.தயக்கத்துடனேயே சில அவநம்பிக்கைகளின் இருப்பை நான் கிளறி விடுகிறேன்.                           

இந்த ஊடகம் மூலம் தகவல் பெறுபவர்கள் (channelists ) வேறு வழிகளில் சோதித்துப் பார்க்க முடியக்கூடிய தகவல்களை ஏன் தர மாட்டேன் என்கிறார்கள் என்று என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன்.மாவீரன் அலெக்சாண்டர் தனது நடுகல் இருக்கும் சரியான இடத்தை ஏன் சொல்லவில்லை? பெர்மார்ட் தனது கடைசித்தேற்றம் பற்றி ஏன் பேசவில்லை ?.சான்வில்கிஸ் லிங்கனின் படுகொலை சதி  பற்றி ஏன் பேசவில்லை?ஹெர்மன் கோரிச் ஜெர்மன் பாராளுமன்றம் தீயிட்டுக் கொளுத்தப் பட்டது பற்றி ஏன் சொல்லவில்லை?சோபகிள்ஸ், டெமாக்ரட்டிஸ்,அரிஸ்டார்ச்சஸ் ஆகியோர் தமது கடைசி நூல் பற்றி ஏன் பேசவில்லை? தங்களது சிறந்த படைப்புகள் எதிர்கால சந்ததியினரைச் சென்றடைய வேண்டும் என அவர்கள் விரும்பவில்லையா?   
 
இறப்புக்குப் பின் உயிர் வாழ்தல் பற்றிய நல்ல சாட்சியம் ஒன்று வெளியிடப்பட்டால் அது பற்றி ஆய்வு செய்வதற்கு நான் ஆர்வத்தோடு இருக்கிறேன். ஆனால் அது வெறும் சம்பவம் என்பதாக இருக்கக்கூடாது.அறிவியல் பூர்வமான தரவு ஆக இருக்க வேண்டும். செவ்வாயில் தோன்றும் முகம்,மற்ற கிரகத்து மனிதர்களால் கடத்தப்படுவது என்பதனை எடுத்துக் கொண்டால் பருண்மையான உண்மைகள் மேலானதாக இருக்கும். நான் சொல்வது என்னவெனில் ஆறுதல் அளிக்கும் கற்பனைகளை
விட கசப்பான உண்மை மேலானது. இறுதி ஆய்வில் பெரும்பாலும் கற்பனைகளை விட உண்மையான தரவுகள் தான் மிகவும் வசதியாக இருக்கின்றன.


ஊடக வகையில் செய்திகளைப் பெறுதல் ஆவியுலகத் தொடர்பு மற்றும் இதர மாந்திரீகம் போன்றவற்றின் அடிப்படையான தர்க்கம் என்னவெனில் நாம் சாகும் போது முற்றாக மறைந்து போவதில்லை என்பதாகும். உண்மை அப்படி இல்லை. சில சிந்தனைகள் உண்ர்வுகள் நம்மை பற்றிய சில நினைவுகளில் ஒரு பகுதி தொடருகிறது என்பதாகும். ஒரு ஆன்மா அல்லது ஆவி என்பது பருப்பொருள் அல்ல. சக்தியும் அல்ல.
வேறு ஏதோவாக இருக்க முடியும். எதிர் காலத்தில் நாம் மனித உடல்களிலும் மற்ற உயிரினங்களின் உடலின் உள்ளும் நுழைய முடியும். எனவே இறப்பு என்பதன் வேதனையை மழுங்கடித்து விடும் என்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கும் மேலாக ஆவிஉலகம் அல்லது ஊடகங்கள் வாயிலாக செய்தி பரப்புதலின் வாதங்கள் உண்மையெனில் நம்மால் நேசிக்கப்பட்டு இறந்து போனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதான வாய்ப்பு நமக்கு இருக்கிறது.

3500 வயதான "ராம்தா" என்பவருடன் தான் தொடர்பு கொண்டிருப்பதாக வாக்ஷ¢ங்டன் மானிலத்தைச் சேர்ந்த சே.இசட்.நைட் என்பவர் சொல்கிறார். இந்த நைட் என்பவரின் நாக்கு உதடுகள் குரல் வளையைப் பயன்படுத்தி ராம்தா நன்றாக ஆங்கிலம் பேசுகிறாராம். அப்பொது வெளிவரும் பேச்சு இந்திய உச்சரிப்பு போலத் தோன்றுகிறதாம். பெரும்பாலான மனிதர்களுக்குப் பேசுவது எப்படி என்பது தெரியும்.குழந்தைகளில் இருந்து தொழில் முறை நடிகர்கள் வரை பல்வேறு விதமான குரல்களைத் தம் கை வசம் வைத்திருக்கின்றனர். இதன் எளிமையான கருதுகோள் என்னவாக இருக்கும் என்றால் திருமதி நைட் தன் மூலமாகவே ராம்தாவை
பேச வைக்கிறார் என்பதாகும்.அவருக்கு பனியுறை காலத்திய உடல் இழந்த உயிரிகளுடன் நேரடியாக எந்தத் தொடர்புகளும் இல்லை. அதற்கு மாறான சாட்சியங்கள் ஏதேனும் இருப்பின் அதனை நான் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். திருமதி நைட் அவர்களின் வாழ்மொழி உதவி இல்லாமல், ராம்தா தானே பேச முடிந்தால் அது மிகவும் பெரிய அளவில் உணர்வில் பதியும்.அப்படி இல்லாது போனால் நாம் எவ்வாறு இந்த விசயத்தை பரிசோதித்துப் பார்க்க முடியும்? (நடிகை ¦க்ஷர்லி மக்லீன் அட்லாந்திசில் ராம்தா தனது சகோதரனாக இருந்ததாக உறவு கொண்டாடுகிறார்.அது வேறு கதை).

ஒரு வேளை, நாம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக ராம்தா கிடைப்பாராயின்,தான் யாரென்று உரிமை கொண்டாடுகிறார் என்பதை நிரூபிக்க இயலுமா? 35000 ஆண்டுகளுக்கு முன்பே தான் வாழ்ந்தது தோராயமாகவேனும் அவருக்கு எவ்வாறு தெரிய வந்தது? காலத்தைப் பொறுத்தவரை அவர் எந்த நாட்டின் கணக்கீட்டு முறையைப் பின்பற்றுகிறார்? இடையில் கடந்து போன ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பற்றிய தகவல்களை யார் வைத்திருக்கிறார்கள்? எதற்கு முன்பு அல்லது எதற்குப் பின்பு 35000 ஆண்டுகள் என வைத்துக் கொள்வது ?.அந்தக் காலம் பற்றி ராம்தா ஏதாவது கண்டு பிடிப்பாரேயாகில் அவர் அவ்வளவு
வயதானவர் எனக்கொள்ளலாம். இல்லையெனில் அவனோ அவளோ போலி என்றாகிவிடும்.

ராம்தா எங்கே வசித்தார்? (அவர் இந்திய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுகிறார் என்பது சரியென்றால் 35000 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு தான் பேசினார்களா? ). அப்போதைய தட்ப வெப்ப நிலை எவ்வாறு இருந்தது? ராம்தா என்ன உணவு சாப்பிட்டார் ?. (தொல்பொருள் ஆய்வாளர்களுக்குத் தெரியும் அவ்வளவு காலதுக்கு முன்பு மக்கள் என்ன சாப்பிட்டார்கள் என்ற விவரம்.) அந்தப்பகுதியில் தோன்றிய மொழிகளும் சமூக அமைப்பும் என்னவாக இருந்தன? ராம்தா யாருடன் வசித்தார்?அவருக்கு மனைவி
மனைவிகள்,குழந்தைகள்,பேரக்குழந்தைகள் இருந்தார்களா? ஆயுள் சுழற்சி எப்படி இருந்தது? குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயுள் நீட்டிப்பு எவ்வாறு இருந்தது?அவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டு முறையைக் கடைப்பித்தார்களா? எந்த விதமான ஆடைகளை உடுத்தினார்கள்? துணி எவ்வாறு  தயாரிக்கப் பட்டது? அப்போதிருந்த வேட்டையாடி உண்ணும் பயங்கர மிருகங்கள் யாவை? மீன் பிடிக்கும் வேட்டையாடும் யுக்திகளும் சாதனங்களும் என்னவாக இருந்தன?ஆயுதங்களைப் பயன் படுத்தினார்களா? தொற்று நோய்கள்
இருந்தனவா?அயலவர்கள்மீதான அச்சம் இருந்ததா? இனக்குழுப் பற்று இருந்ததா? ராம்தா அட்லாண்டிசின் உயர்ந்த கலாச்சார மரபினில் வந்தவர் என்றால் அந்த கலாச்சாரத்தின் மொழி இயல் தொழிலியல் வரலாற்றியல் மற்றும் இதர விவரங்கள் என்னவாக இருந்தன?அவர்களது எழுத்துரு எவ்வாறு இருந்தது ? இவற்றை எல்லாம் எமக்குச் சொல்லுங்கள்.அதை விட்டுவிட்டு அற்பமான போதனைகள் தாமே வழங்கப்படுகின்றன.

மற்றொரு எடுத்துக்காட்டினைப் பார்ப்போம்.பழங்காலத்தில் இறந்து போன ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் தொகுதி அல்ல இது.ஆனால் இதழியளாளர் ஜிம்¦க்ஷனபெல் என்பவரால் மனிதர்கள் அல்லாத எதிர் பாராமல் தோன்றும் ,நம் உலகைச் சுற்றி வரும் உயிரிகளிடமிருந்து பதிவு செய்யப் பட்டவை.:

" பாவம் செய்யும் தேசம் எங்களைப் பற்றி பொய்களைப் பரப்புவது கண்டு நாங்கள் கவலைப் படுகிறோம் .நாங்கள் இயந்திரங்களில் இருந்து வரவில்லை,இயந்திரங்கள் மூலமாக பூமியில் இறங்கவில்லை.காற்றைப் போல நாங்கள் வந்தோம்.நாங்கள் உயிர்ச்சக்திகள்.தரையிலிருந்து வந்த உயிர்ச்சக்திகள்.இங்கே வாருங்கள்.மூச்சு விடும் தூரத்தில்தான் .........இலட்சக்கணக்கான மைல்களுக்கப்பால் அல்ல.உங்கள் உடலில் உள்ள சக்திகளை விடப் பெரிய உயிர்ச்சக்தி.ஆனால் வாழ்வின் உயர்ந்ததொரு மட்டத்தில் நாம் சந்திக்கிறோம்.எங்களுக்கென்று பெயர் ஏதும் இல்லை.உங்கள் உலகத்துக்கு இணையாகவே இருக்கிறோம்.உங்கள் உலகத்துக்குப் பக்கத்திலேயே இருக்கிறோம்.தடுப்புச் சுவர்கள் இடிக்கப் படுகின்றன. கடந்த காலத்திலிருந்து இரு மனிதர்கள் எழுந்து
வருகிறார்கள்.இனி பெருங்கரடி (துருவம்)உலகம் அமைதியில் வாழும். "

பண்டைக்கால மதங்களைப் போல இறப்புக்குப் பிந்தைய வாழ்வு பற்றியும்....ஏன் நித்திய வாழ்வு பற்றியும் கூட உறுதி மொழிகள் அளிக்கப்படுவதால் சிறுபிள்ளைத்தனமான அற்புதங்களுக்கு மக்கள் செவி சாய்க்கிறார்கள்.

ஜே.பி.எஸ் ஹால்தேன் என்னும் பிரித்தானிய அறிவியலாளர் நித்திய வாழ்வு பற்றிய ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்குகிறார்.அவர் ஆர்வம் செலுத்திய பல துறைகளுள் மக்கள்தொகையின் மரபீனித்துறையும் அடங்கும்  என்பதோடு அத்துறையின் முன்னோடிகளிலொருவர் ஆவார். மிகத் தொலைவானதொரு எதிர் காலத்தில் தாரகைகள் ஒளியிழந்து அண்டவெளி முழுதும் குளிர்ந்து ஒரு மெல்லிய வாயு படரும் என அவர் யூகித்தார்.இருந்த போதிலும்,நாம் நீண்ட காலம் காத்திருந்தால்
அந்த வாயுவின் அடர்த்தியின் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய புள்ளி விவரங்கள் கிடைக்கலாம்.நீண்டதொரு காலப்போக்கில் நமது பிரபஞ்சம் போன்ற ஒன்றை மறு படைப்பு செய்வதற்கு இந்த ஏற்றத்தாழ்வுகள் போதுமானதாக இருக்கும்.இந்தப் பிரபஞ்சம் அளவற்ற பழமை வாய்ந்தது எனின் அப்படிப்பட்ட மீளுருவாக்கங்கள் பலப்பலவாக இருக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, எண்ணற்ற பால் வெளிகள், தாரகைகள்,தாவரங்கள்,உயிரினங்கள்கொண்ட அளவற்ற பழமை வாய்ந்த இந்தப் பிரபஞ்சத்தில் உங்களோடும் உங்களை நேசித்தவர்களோடும் இதே போன்ற ஒரு பூமி தோன்றி உங்கள் அனைவரையும் இணைத்து வைக்கும்.என்னல் எனது பெற்றோர்களை சந்திக்க முடியும்.அவர்களுக்குத் தெரிந்திராத பேரக்குழந்தைகளை அறிமுகப் படுத்த முடியும்.இப்படி எல்லாம் ஒரு முறை மட்டும்தான் நிகழும் என்பதில்லை.அளவற்ற முறைகள் இவ்வாறு நிகழும்.

இருந்த போதிலும் மதங்கள் வழங்குவதைப் போன்ற ஆறுதல் அல்ல இது.இந்த நேரத்தில்,அதாவது நானும் எனது வாசகர்களும் பகிர்ந்து கொள்ளும் இந்த நேரத்தில்,என்ன நடந்தது என்பதை நம்மில் ஒருவராலும் நினைவு கூற முடியவில்லை என்றாலும்,உடலளவில் மீண்டும் எழுவது என்பது என் காதுகளில் மட்டுமாவது  முழுமையாக ஒலித்துக் கொண்டிருக்கும். .இந்த சிந்தனையில் அளவற்றது என்பதன்  பொருளை நான் குறைத்து மதிப்பிட்டு விட்டேன்.ஹால்தேனின் சித்தரிப்பின்படி பிரபஞ்சங்கள் இருக்கும்,உண்மையில் அவை எண்ணற்றதாக இருக்கும்.அவற்றின் முந்தைய பல சுழற்சிகள் பற்றிய நினைவுகளை நமது மூளை
முழுமையாக இருத்தி வைத்திருக்கும் இன்னும் இருப்பில் வர இருக்கின்ற எல்லா பிரபஞ்சங்களைப் பற்றிய நினைவுகளும்(இன்னும் என்பது ஒரு முறைதான் என்று பொருள்படாது,எண்ணற்ற முறை எனவாகும்.) இந்த சுழற்சியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அத்தனையும் தாண்டி முன் செல்லும் துயரங்களாகவும் பயங்கரங்களாகவும் உறுதி செய்யப்படும்.திருப்தி என்பதோ நமதருகில் இருக்கிறது_அது மட்டுப்பட்டதாகஇருந்த போதிலும்.

நாம் எந்த மாதிரிப் பிரபஞ்சத்தில் வசிக்கிறோம்? காலப்போக்கில் பிரபஞ்சம் விரிவடைவதை மாற்றியமைக்கப் போதுமான அளவு பொருள்(Matter)இருக்கிறதா?வெற்றிடங்களில் எற்படும் மாற்றங்களின் குணாம்சம் எப்படி இருக்கிறது? என்ற பல குழப்பமான கேள்விகளுக்கு விடை அளிப்பதில்தான் ஹால்தேனின் ஆறுதல் வார்தைகள் நிலைநிற்க முடியும்.இறப்புக்குப்பின் உயிர் வாழும் ஆழ்ந்த விருப்பம் உள்ளவர்கள்;அண்ட கோளவியல்(cosmology),கதிரியக்க ஆற்றல் அலை வீச்சின் ஈர்ப்பு சக்தி,அடிப்படைத்துகள் அறிவியல் மற்றும் வரம்பு கடந்த கணிதம் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும் எனத்தோன்றுகிறது.

அலெக்சாந்த்ரியாவின் பண்டைய தேவாலயப் பாதிரியாரன கிளமண்ட்  என்பார் கிரேக்கர்கள் பற்றிய தனது விளக்க உறையில் (இது 00190 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது) பல தெய்வ வழிபாட்டுப் பண்டைய முறையின் நம்பிக்கைகளை வஞ்சப்புகழ்ச்சியாய் தோன்றும் விதத்தில் மறுதலித்தார்: "வளர்ந்த மனிதர்களை இத்தகைய கதைகளைக் கேட்க அனுமதிப்பதில் இருந்து நாம் விலகி நிற்கிறோம். தேம்பி அழுதால் கூட நமது குழந்தைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் புராணக்கதைகள் சொல்லும் பழக்கம் இல்லை."

நமது காலத்தில் கடுமை குறைந்த வறையறைகளை நாம் வைத்திருக்கிறோம்.சாந்தாக்ளாஸ்,ஈஸ்டர் பன்னி டூத்·பேரி போன்ற கதைகளை அவை உணர்ச்சிகரமாக இருக்கின்றன என்பதால் குழந்தைகளுக்குச் சொல்கிறோம்.ஆனாலும் அவர்கள் வளரும் முன்னரே தவறான கருத்துகளையும் அய்யங்களையும் போக்கி விடுகிறோம்.ஏன் இப்படிப் பின் வாங்குகிறோம்? ஏனெனில்,வயது வந்தவர்கள் என்ற நிலை வரும்போது,இந்த உலகம் எவ்வாறு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் தான்குழந்தைகளின்
நலன் அடங்கி இருக்கிறது.இன்னமும் சாண்டாக்லாஸ் பற்றி  நம்பும் வயது வந்தவர்கள் பற்றி காரணகாரியத்தோடு நாம் கவலைப் படுகிறோம்.

  சமயங்களை வலியுறுத்தும் தத்துவ வித்தகர் டேவிட் ஹ்யூம் எழுதினார்:

  "இத்தகைய விஷயங்களில் தங்கள் மனதில் எழும் அய்யங்கள் பற்றி தமது சொந்த மனசாட்சியுடன்
  கூட இசைந்து போக மனிதர்கள் துணிவதில்லை.கண் மூடித்தனமான நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கின்றனர்.
  தங்களது உண்மையான அவநம்பிக்கையை மறைத்து நேரடியான மத வெறியால் ஆணையிட்டுச் சொல்கின்றனர்."





No comments:

Post a Comment