ஒரு ஆப்பிள் கேக்கை ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டுமென்றால், நீங்கள் முதலில் ஒரு பேரண்டத்தைக் கட்டவேண்டும்.
‘காஸ்மோஸ் ‘
கெப்ளர் தான் வெகுகாலம் உண்மையென்று நம்பி, இருதயத்தில் இருத்தி வைத்திருந்த நம்பிக்கை, அவர் செய்த துல்லியமான பரிசோதனை முடிவுகளுக்கு மாறாக இருந்த போது, அவர் உண்மையைத்தான் சங்கடத்துடன் ஒப்புக்கொண்டார். மனதுக்கு அருகில் இருந்த பிரமைகளை விட கடினமான உண்மைகளையே அவர் விரும்பினார். அதுதான் அறிவியலின் இதயம்.
-காஸ்மோஸ்
பெளதீகத்தில் (physics) மிகவும் அழகான, சிறப்புவாய்ந்த எத்தனையோ கோட்பாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் பரிசோதனைகளுக்கு எதிராக அவைகளால் நிற்க முடியவில்லை. என்னுடைய பார்வையில், பரிசோதனைகளுக்கு எதிராக நின்று தாக்குப் பிடிக்க முடியாத கோட்பாடுகளை தூக்கி எறியும் மனித குணம், நமது சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் மத விஷயங்களில் கடை பிடிக்கப்பட்டால், நமது மனித வாழ்க்கை மிகவும் முன்னேறிவிடும் என்று நம்புகிறேன்.
– ‘ஏடனின் டிராகன்கள் ‘ என்ற புத்தகத்தில்.
அறிந்து கொள்ள ஆர்வமும், பிரச்னைகளைத் தீர்க்கும் ஆர்வமும் மனித இனத்தின் உணர்ச்சிகரமான அடையாளங்கள். மனித முயற்சிகளில் மனிதத்துவம் மிகுந்தவை கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், இசை மற்றும் கலைகள். இந்த வரிசை ‘கலைப்படிப்பு ‘ (humanities) என்று சொல்லும் பாடங்களை விட அதிகமானவைதான். உண்மையிலேயே, இந்த பொதுவாக குறிப்பிடப்படும் கலைப்படிப்புகள் குறுகியவை. கணிதம் கவிதையைப் போலவே மிகுந்த மனிதத்துவம் மிகுந்தது.
‘ஏடனின் டிராகன்கள் ‘ புத்தகத்திலிருந்து.
‘ பயத்தின் காரணமாகவும், அதிகாரத்தின் மீது கொண்ட ஆசையாலும் அளவிட முடியாத, உண்மையிலேயே நம் எல்லோருக்கும் பொதுவான அறிவை அழித்த ஏராளமான மனிதர்கள் நம் வரலாற்றில் நிரம்பிக் கிடக்கிறார்கள். இது இன்னொரு முறை நடக்க அனுமதிக்கக்கூடாது ‘
– காஸ்மோஸ்
நமது விசுவாசம் நம் இனத்துக்கும், நம் கிரகத்துக்கும் மட்டுமே. நாம் இந்த பூமிக்காகப் பேசுகிறோம். நாம் வாழவேண்டிய கட்டாயம், நமக்காக மட்டுமல்லாமல், இந்த நாம் உதித்த பழைமையான பேரண்டத்திற்காகவும்தான்
– காஸ்மோஸ்
நாம் 4.5 பில்லியன் வருடங்களின் கடினமான, மெதுவான, உயிரியல் பரிணாமத்தின் விளைவு. இத்துடன் இந்த பரிணாமம் நின்று போய்விட்டது என்று நாம் நினைத்துக்கொள்ள எந்தக் காரணமும் இல்லை. மனிதன் ஒரு இடைப்பட்ட மிருகம். அவன் பரிணாமத்தின் உச்சம் அல்ல.
– காஸ்மிக் தொடர்பு
ஒரு பேரண்டத்தின் பார்வையில் பார்க்கும் போது, நாம்தான் கடைசி என்றோ, நாம் தான் மிகச்சிறந்த படைப்பு என்றோ நினைத்துக்கொள்ள எந்தக் காரணமும் இல்லை.
– காஸ்மிக் தொடர்பு
விண்வெளி வேதியியலின் சாம்பலே இன்று நமது மனமாக உருமாறி வந்திருக்கிறது. தொடர்ந்து வளரும் வேகத்தில், அது எழுத்தையும், நகரங்களையும், கலைகளையும், அறிவியலையும் கண்டுபிடித்திருக்கிறது. இதுவே இன்னும் மற்ற கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் விண்கலங்களை அனுப்புகிறது.. இதெல்லாம் ஹைட்ரஜன் அணுக்களுக்கு சில 15 பில்லியன் வருடங்கள் நேரம் கொடுத்தால் செய்யக்கூடிய விஷயங்கள்
– காஸ்மோஸ்
ஆதாரங்கள் இல்லாமை, இல்லாமையின் ஆதாரமல்ல
-ஏடனின் டிராகன்கள்
அசாதாரணமான விஷயங்களை நாம் நிச்சயமாக ஆராயவேண்டும். ஆனால், அசாதாரணமான விஷயங்கள் இருப்பதாகச் சொல்பவர்களுக்கு அசாதாரணமான ஆதாரங்களும் தேவை.
– பிரோக்காவின் மூளை
நவீனப் போர்களை நாம் இன்னொரு சமுதாய மக்களின் மீது அதிக அளவு விளைவுடன் நடத்துகிறோம். இந்த விளைவுகளின் மோசத்தை நாம் கணக்கிலெடுத்துக்கொள்ளக்கூட பயப்படுகிறோம். இப்படிப்பட்ட பெரும் படுகொலைகள் பெரும்பாலும், இன, தேசீய மறு விளக்கங்களாலும், எதிராளிகள் மனிதர்கள் அல்ல விலங்குகள் என்றும் நியாயப்படுத்தப்படுகின்றன.
– ஏடனின் டிராகன்கள்
நன்றி திண்ணை இணையதளம்